சச்சினுடன் சமரசம்: ராஜஸ்தான் ஆட்சி தப்பியது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் காங்கிரஸ் இடைக்கால தலைவி சோனியா, எம்பி ராகுல்காந்தி ஆகிய இருவரையும் சந்தித்ததை அடுத்து அம்மாநிலத்தில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.

சச்சின் பைலட்டின் கோரிக்கையை ஏற்று அவர் எழுப்பிய புகார்கள், பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்கிறது காங்கிரஸ் தலைமை. இத்தகவலை அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தார் சச்சின் பைலட். எனினும் ஆட்சி அமைத்தது முதலே இருவருக்கும் இடையே மறைமுக அதிகார மோதல் நீடித்து வந்தது.

தன்னை ஆதரித்த 19 எம்எல்ஏக்களுடன் திடீரென தனி அணியாகச் செயல்படத் தொடங்கிய சச்சின், முதல்வருக்கு எதிராகப் பல்வேறு புகார்களை எழுப்பினார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக வரும் 14ஆம் தேதி மாநில சட்டப்பேரவையில் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக அசோக் கெலாட் அறிவித்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் இடைக்கால தலைவி சோனியா, எம்பி ராகுல் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்துப் பேசினார் சச்சின்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவிகள் தமக்குப் பெரிதல்ல என்றும் கொள்கைகளை முன்னிறுத்துவதே தமது அரசியல் என்றும் விளக்கமளித்தார். தமது கோரிக்கைகளைப் பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்த காங்கிரஸ் தலைமைக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon