இந்தியா தற்போது மூன்று கொவிட்-19 தடுப்பூசிகளைச் சோதித்து வருவதாகவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி சென்று சேரும் என்றும் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தேசிய மின்னிலக்க சுகாதார இயக்கம் ஒன்றையும் அறிவித்திருக்கிறார். மின்னிலக்க சுகாதாரப் பதிவு முறையும் நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களையும் சுகாதார வசதிகளையும் கொண்டுள்ள பதிவகமும் இந்த இயக்கத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வோர் இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று திரு மோடி இன்று காலை டெல்லியிலுள்ள செங்கோட்டையில் ஆற்றிய தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.
இந்த சுகாதார அடையாளத்தில் நோயாளிகளின் மருத்துவ சோதனைகளும் உடல்நலப் பிரச்சினைகளும் மருந்துகளும் மருத்துவ அறிக்கைகளும் உள்ளடக்கம் செய்யப்படும் என்றார் திரு மோடி முன்பதிவுகளிலும் கட்டணங்களிலும் ஏற்படும் பிரச்சினைகளை இது தீர்க்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா, உள்நாட்டிலேயே தடுப்பூசியைத் தயாரிக்க அவசரமாக முயன்று வருகிறது. தனியார் நிறுவனமான பார்த் பயோடெக்னாலஜி இன்டர்நேஷனல், மனித சோதனைகளை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஸைடன் கெடிலா நிறுவனமும் இந்தி ஊசிமருந்து நிலையமும் தங்களது தடுப்பூசிகளைச் சோதித்து வருகின்றன.
தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவற்றை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகிப்பதற்கான திட்டம் தயாராக இருப்பதாக திரு மோடி கூறினார்.

