புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை (2.5 மில்லியன்) 25 லட்சத்தைக் கடந்துவிட்டது. நாடு முழு வதும் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65,002 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
இதையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 26,196ஆக உயர்ந்துவிட்டது. இவர்களில் 6,68,220 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 18,08,936 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 60,000க்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 7ஆம் தேதி நிலவரப்படி பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டிய நிலையில் அடுத்த ஏழு நாட்களில் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் நேற்று ஒரே நாளில் 20,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்ட்டது.
புதிதாக 996 பேர் மாண்ட நிலை யில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,036 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 71.61% ஆக உயர்ந்துள்ள நிலையில் இறப்பு விகிதம் 1.94% ஆகக் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதமும் 26.45% ஆகச் சரிந்துவிட்டது.
கிருமிப் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,72,734ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 364 பேர் உயிரிழந்த நிலையில் அந்த மாநிலத்தில் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 19,427 ஆனது. இருப்பினும் 4,01,442 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 865 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமித்தொற்று எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,26,245ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 117 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 5,514 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மூன்றாம் இடத்தில் இருக்கும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,50,652 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக் கிழமை அங்கு 11 பேர் உயிரிழந்ததால் உயிர்ப்பலி எண்ணிக்கை 4,178 ஆனது.

