மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றின் கோரப்பிடி மேலும் இறுகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு புதிதாக 12,614 பேருக்கு கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,84,754ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,749ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சிகிச்சைக்குப் பின் கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது என்றும் தற்போது 1,56,409 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையே கர்நாடகாவில் புதிதாக 8,818 பேருக்கு கிருமி தொற்றியதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,19,926ஆக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் மேலும் 114 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மரண எண்ணிக்கை 3,831ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,811ஆக அதிகரித்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக சுகாதாரத்துறை, தற்போது 81,276 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிருமித் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 693 பேர் பலியாகியுள்ளனர். 68 ஆயிரம் பேர் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். ஆந்திராவில் மொத்தம் 2,81,817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2,562 பேர் பலியாகியுள்ளனர்.
2.58 மில்லியன் பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.58 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1.86 மில்லியன் பேர் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனா கிருமியின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 71.91 விழுக்காடு ஆகும். இந்தியாவில் இதுவரை 29 மில்லியன் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 63 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது.

