சென்னை: நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேனாம் பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார்.
இந்தக் கொடி ஏற்றும் நிகழ்வில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் ஸ்டாலின் நடந்து கொண்டதாக அதிமுக சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல், சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அதில், "தேசிய கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போதும் அதற்குரிய மரியாதையை மு.க.ஸ்டாலின் தரத் தவறிவிட்டார். கையுறையும் அணிந்திருந்தார்.
"தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். எனவே அவர் மீது தேசிய கொடி அவமதிப்பு சட்டத் தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.

