புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த லூயோ சாங் என்பவர் வருமான வரித்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா குறித்து அவர் ரகசியமாக தகவல் சேகரித்துள்ளார். இதற்காக டெல்லியில் வசிக்கும் திபெத் மதத் துறவிகள் பலருக்கு இவர் லட்சக்கணக்கில் பணம் வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லூயோ சாங் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து மிசோராமைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இந்திய அடையாளத்தைப் பெற்றது அம்பலமாகியுள்ளது.
போலிக் கடப்பிதழும் பெற்றுள்ள லூயோ சாங் நாற்பதுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இயக்கி, சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.
சில சீன நிறுவனங்கள் சார்பாக அந்தப் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே லூயோ சாங் மீது டெல்லி போலிசார் முன்பே வேறொரு வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் பிணையை பெற்று வெளியே உள்ளார். இந்நிலையில் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ளார்.
இந்த முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.

