பெங்களூரு: காய்ச்சலால் இறந்தவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருக்கும் என்ற அச்சம் காரணமாக உடலை அடக்கம் செய்ய யாரும் உதவி செய்யாததால் இறந்தவரின் உடலை அவரது மகன் மிதிவண்டியில் தூக்கிச் சென்றுள்ளார்.
துயரம் நிறைந்த இந்த அவலச் சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் வசித்த 71 வயதான சதப்பா பரசப்பா என்ற முதியவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இரு தினங்களுக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். எனினும் நேற்று முன்தினம் காலை முதியவர் சதப்பா திடீரென உயிரிழந்தார்.
அவர் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தார் தவிக்க நேரிட்டது.
யாரும் உதவாத நிலையில் சதப்பாவின் மகன் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து தந்தையின் உடலை மிதிவண்டியில் வைத்து அடக்கம் செய்ய கொண்டு சென்றார். இது தொடர்பான புகைப்படமும் காணொளிப் பதிவும் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதுகுறித்துத் தகவலறிந்த அப்பகுதியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் கடைசி நேரத்தில் சதப்பாவின் மகனை தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து அவர் அமரர் ஊர்திக்கு ஏற்பாடு செய்ததால் சதப்பாவின் உடல் பாதி வழியிலிருந்து அதில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

