சென்னை: கொரோனாவின் கோரப்பிடி கொஞ்சமும் தளராத நிலையில் சென்னையில் நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது.
கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கையில் இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் நீடித்து வருகிறது. எல்லா மாவட்டங்களையும் சேர்த்து தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்குகிறது.
திங்கட்கிழமை மட்டும் 120 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இவர்களையும் சேர்த்து 5,886 உயிர்களை கொரோனா கிருமி பறித்துவிட்டது. மேலும், திங்கட்கிழமை ஒரே நாளில் 5,890 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிருமிப் பரவல் கட்டுப்படாத நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு சென்னையில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 500 பேர் வரை மட்டுமே அனுமதி. அதற்காக மணிக்கொரு முறை 'டோக்கன்' வழங்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுக்கப்பட்டுள்ளது.
மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆயினும் ஒருசில கடைகள் தவிர மதுக்கடைகளில் நேற்று கூட்டம் அவ்வளவாகக் காணப்படவில்லை. முற்பகல் 11.30 மணிக்கு பெரும்பாலான கடைகளில் ஐந்து முதல் பத்துப் பேர் வரைதான் வரிசையில் நின்றிருந்ததாக த ஹிண்டு நாளிதழ் தெரிவித்தது. கொரோனா கட்டுப்படாத நிலையில் மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கூறுகையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கிருமித்தொற்று அதிகரிக்கும் என்றார்.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மக்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்த மூ.ராஜேஸ்வரி பிரியா தலைமையில் ஏராளமானோர் ஒன்றுகூடி டாஸ்மாக் மதுக்கடைகள் முன் நின்று எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலிசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதற்காக ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். "கொரோனா முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டிய அவசியம் என்ன. சென்னையில் கிருமித்தொற்று அதிகம் உள்ள நிலையில் அவசர அவசரமாக மதுக் கடைகளை திறப்பது தொற்றை மேலும் அதிகரிக்கவே செய்யும்," என ராஜேஸ்வரி கூறினார்.

