புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தினமும் 10 லட்சம் பரிசோதனைகள் என்ற இலக்கை விரைவில் அடைய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்றால் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கொவிட்-19 நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.
கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்வழி முன்கூட்டியே பாதிப்பைக் கண்டறிவதன் மூலம் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் 8.99 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும் இது புதிய உச்சம் என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தியதால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 55,079ஆக பதிவாகி உள்ளது. அண்மைய சில தினங்களாக அன்றாடம் பதிவாகி வந்த புதிய நோய்த்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்திருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் ஒன்பது லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.7 மில்லியனைக் கடந்துள்ளது. இதுவரை 1.97 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர். இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 73.17 விழுக்காடாகும்.
தற்போது 673,166 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கிருமித் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.9 விழுக்காடாக உள்ளது.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 51 ஆயிரத்து 797ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் 228 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
டெல்லியில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,214ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை 2,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 4,062ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 169 பேர் பலியாகியுள்ளனர்.

