புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மூச்சுத்திணறலும் உடல்வலியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
55 வயதான அமித்ஷாவுக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து ஹரியானாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமடைந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து உடல்வலியும் சோர்வும் இருப்பதாக அவர் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பாஜகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

