புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.76 மில்லியனைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 1,092 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளின் பலனாக இந்தியாவில் கிருமித் தொற்றால் உயிரிழப்போர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் குணமடையும் விகிதமும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அன்றாடம் பதிவாகும் புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் 60 ஆயிரத்தைக் கடந்து பதிவாகின. திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 57 ஆயிரமாகக் குறைந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2.76 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரண எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 64,531 பேர் புதிதாக கிருமித் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
அதேசமயம் இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்போர் விகிதம் 1.9 விழுக்காடாகவும் குணமடைந்தோர் விகிதம் 73.6 விழுக்காடாகவும் உள்ளன.

