மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 வயதான சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தங்கும் விடுதியில் இருந்தபோது தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
சுஷாந்த் சிங் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. எனினும் மகாராஷ்டிரா அரசு இதை ஏற்கவில்லை.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா மீது சுஷாந்த் தந்தை பீகார் போலிசில் புகார் அளித்தார். இதையடுத்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மத்திய அமலாக்கப் பிரிவும் ரியாவிடம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அதன் முடிவில் சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பதில் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

