புதுடெல்லி: இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கும் வாய்ப்புள்ளதாக அண்மைய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கிருமித்தொற்று தொடர்பாக அரசுத் தரப்பு வெளியிடும் பாதிப்பு விவரங்களைவிட உண்மையில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார் மருத்துவர் வேலுமணி.
இவர் தலைமையிலான 'தைரோகேர்' நிறுவனம் நாடு முழுவதும் 2.70 லட்சம் பேரிடம் அண்மையில் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அதில் கொரோனா கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலின் அளவு குறித்து ஆராயப்பட்டது.
"இந்த ஆய்வின்போது 26 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்றை எதிர்க்கும் அணுக்கள் உடலில் உற்பத்தியாகி இருப்பது தெரியவந்தது. எனவே, அவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியாகிறது. அப்படியெனில் நாடு முழுவதும் நான்கில் ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியாவதாக கணக்கில் கொள்ள முடியும்," என்கிறார் வேலுமணி.
மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வசிப்போரில் 57 விழுக்காட்டினர் கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டும் அவர், இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் கொரோனா கிருமி எதிர்ப்பு அணுக்கள் உள்ளோரின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்துக்குள் 40 விழுக்காடாக அதிகரிக்கும் என்கிறார்.
இக்குறிப்பிட்ட ஆய்வை தைரலோகேர் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 600 நகரங்களில் சுமார் ஏழு வார, காலம் நடத்தி உள்ளது.
இதற்கிடையே ஹைதராபாத்தை சேர்ந்த செல்லுலார் மூலக்கூறு உயிரியல் நிறுவனம் மற்றும் இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து கழிவுநீரைப் பயன்படுத்தி கொரோனா கிருமித்தொற்று தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் உடற்கழிவுகள் மூலமாக அத்தொற்றை வெளியேற்றுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு பகுதியில் கிருமித்தொற்று எந்த அளவிற்கு உள்ளது எனக் கண்டறிய கழிவுநீர் மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
ஹைதராபாத் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவுநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தியபோது, 2 லட்சம் பேர் கிருமித்தொற்றை வெளியேற்றி இருப்பது கண்டறியப்பட்டது.
அங்கு சுமார் 40 விழுக்காடு கழிவுநீர்தான் சுத்திகரிப்பு மையங்களை வந்தடைகிறது. எனவே ஆய்வுத் தரவுகளைக் கொண்டு கணக்கிடும்போது ஹைதராபாத்தில் சுமார் 6.6 லட்சம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

