சீனாவுக்கு மறைமுக பதிலடி: கடற்படை மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
புதுடெல்லி: தேசத்தின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படை வகித்த பங்கு பாராட்டுக்குரியது என மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கடற்படை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது எனக் குறிப்பிட்டார்.
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்தியக் கடற்படைத் தளபதிகள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு புதுடெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
மூன்று நாள் நிகழ்வுகளின்போது கடற்படையின் செயல்பாடுகள், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மேலும் பிற நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கடற்பாதுகாப்புப் பயிற்சி நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியாவை இணைத்துக் கொள்வது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
பதற்றமான பகுதிகளிலும்கூட இந்தியக் கடற்படை அதன் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தும் செயல்திறன் கொண்டது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியக் கடற்படையின் ஆற்றல் குறித்து தமக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
"கொரோனா தொற்றால் எழும் சவால்களை ஏற்றுக்கொண்டு நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகளில் இந்தியக் கடற்படை தொடர்ந்து முன்னேறி வருகிறது.
"கொரோனா கிருமித்தொற்றால் ஈரான், மாலத்தீவு, உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை 'ஆபரேஷன் சமுத்திரா சேது' திட்டம் மூலம் இந்தியா அழைத்து வந்து தேசத்தின் நலனுக்காக கடற்படை விரிவாகப் பங்களித்துள்ளது என்றார் ராஜ்நாத் சிங.

