இந்தியாவில் முந்தைய மாதங்களில் இல்லாத வகையில், இந்த மாதத்தில் மட்டும் 12 லட்சம் பேருக்கு மேல் கொவிட்-19 தொற்றிவிட்டது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இம்மாதத்தில் இத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் 1,109,444 பேரை கொரோனா தொற்றிய நிலையில், இம்மாதத்தில் இதுவரை அங்கு 1,276,437 பேர் கிருமி பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.
இம்மாதத்தில் அமெரிக்காவில் 994,863 பேரும் (19ஆம் தேதி வரை) பிரேசிலில் 794,115 பேரும் கொரோனா தாக்குதல் கண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 68,898 பேடை கொரோனா தொற்றிவிட்டது. இதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 2,905,823ஆக அதிகரித்தது.
மேலும் 983 பேர் கொரோனாவால் மாண்டு போனதையடுத்து, பலி எண்ணிக்கை 54,849ஆக உயர்ந்து விட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 326 பேர் உயிரிழந்து விட்டனர். அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 102 பேரும் தமிழகத்தில் 116 பேரும் ஆந்திரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 95 பேரும் மாண்டுபோயினர்.
அதே நேரத்தில், தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,158,946 பேர், அதாவது, கிட்டத்தட்ட 74 விழுக்காட்டினர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு விட்டனர். இறப்பு விகிதம் 1.89 விழுக்காடாக குறைந்துள்ளது.
கொரோனா தொற்று கண்டோரில்1.92 விழுக்காட்டினர் இப்போது மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

