கனமழை நீடிப்பு: வெள்ளத்தில் மிதக்கிறது வடகர்நாடகா

கனமழை நீடிப்பு: வெள்ளத்தில் மிதக்கிறது வடகர்நாடகா

2 mins read
ac76dc32-fe88-408f-964d-8822cf66a5b0
படம்: ஊடகம் -

பெங்களூரு: பத்து நாட்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக வடகர்நாடகாவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஏற்கெனவே கொரோனா கிருமித்தொற்று காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், வெள்ள பாதிப்பும் கனமழையும் வடகர்நாடகா மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்துக்கட்டுகிறது. அசாம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ள மாநிலங்கள் கடும் சேதங்களைச் சந்தித்துள்ளன. தற்போது கர்நாடகாவையும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது.

அங்கு, கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பசவசாகர் அணையும் அலமட்டி அணையும் தொடர் மழையால் நிரம்பி உள்ளன. இதையடுத்து இரு அணைகளுக்குமான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் பாகல்கோட்டை, ராய்ச்சூர், யாதகிரி, விஜயபுரா ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.

இம்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. மேலும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாகவும் ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலும் வெள்ளத்தில் மிதக்கிறது.

மழை மேலும் சில தினங்கள் நீடிக்க வாய்ப்புள்ளதால், வடகர்நாடக மக்கள் அச்சத்தில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.