திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை தனியாருக்கு குத்தகை அடிப்படையில் வழங்க கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இம்முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியிருந்தார்.
மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணியை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதில் கேரள அரசு ஒத்துழைப்பது மிகக் கடினம் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
காணொளி வசதி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை. இதில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகையைப் பெற அதானி குழுமம் அளிக்க முன்வரும் தொகையைச் செலுத்த கேரள அரசு தயாராக உள்ளது என்றார்்.
கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தனியார் நிறுவனம் விமான நிலையத்தை பராமரிப்பது கடினம் என்றும் அம்மாநில அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்படும் ஒரு தரப்பால் எந்தவொரு தொழிலையும் சிறப்பாக நடத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே விமான நிலையத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு குத்தகை விடுவதற்கான ஏலத்தில் கேரள அரசும் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அதிக தொகை தருவதாக அதானி குழுமம் தெரிவித்ததால் அந்நிறுவனத்துக்கு குத்தகை அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

