இந்திய தலைநகர் டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பங்கரவாத சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதுடெல்லியிலும் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் பெரும் பதற்றம் தொடருகிறது. அந்த மாநிலத்தின் நொய்டா நகருக்கும் டெல்லி நகருக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நேற்று பாதுகாப்புப் படையினரின் சோதனைக்கு உள்ளாயின.
புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்தேக நபரை டெல்லி முழுவதும் தேடிய போலிசார் வெள்ளிக்கிழமை இரவு 11,30 மணியளவில் அவரை கைது செய் தனர். அவரைப் பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
டெல்லியின் தௌலா குவான் வட்டாரத்தில் போலிசாரால் சுற்றி
வளைக்கப்பட்ட அந்த பயங்கரவாத சந்தேக நபரின் பெயர் அபு யூசுஃப் என்று அதிகாரிகள் கூறினர்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சமையல் குக்கர் பாத்திரங்கள் இரண்டில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வெடிக்கும் சாதனங்களாக உருவாக்கப்பட்டு இருந்தன. கைத்துப்பாக்கி ஒன்றும் அந்நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
பலத்த காவல் நிறைந்த சிறப்புச் சிறையில் எட்டு நாள் விசாரணைக் காவலில் அவர் அடைக்கப்பட்டார். கைது செய்யப்படுமுன் டெல்லி முழுவதும் அவர் சுற்றிப் பார்த்து பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான இடங்ளைத் தேர்வு செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனி நபராக இந்தியாவுக்குள் அவர் நடமாடினாரா அல்லது அவரது கூட்டாளிகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலாவது ஒளிந்திருக்கிறார்களா என்ற விவரங்கள் விசாரணை மூலம் திரட்டப்பட்டு வருவதாகவும் போலிசார் கூறினர்.

