வடமாநிலங்களில் மழை, வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த மழையால் ஜுன்சி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போபால், செகோர் உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் தான் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் போபாலில் 210 மில்லி மீட்டர் மழையும் இந்தூரில் 263 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆக அதிகமாக செகோரில் 316 மி.மீ. பெய்துள்ளது என அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்தது..
போபால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் ஏராளமான சாலைகள் சேதமடைந்ததுள்ளதாகவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்தது. போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கிப்போனதால் போபாலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குத் தொடரும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

