புதுடெல்லி: நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 மில்லியனை நெருங்கியுள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரேநாளில் ஒரு மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தினமும் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இலக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது.
கடந்த 21 நாட்களில் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் நன்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 69,878 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. அதேவேளையில் ஒரே நாளில் சுமார் 63 ஆயிரம் பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடையும் விகிதம் 74.69 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2.22 மில்லியன் நோயாளிகள் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

