கொரோனா பலி: துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு
புதுடெல்லி: கொவிட்-19 நோயால் உயிரிழந்த துப்புரவுப் பணியாளரின் குடும்பத்துக்கு டெல்லி அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் கிருமித் தொற்றால் பலியாகி உள்ளனர். அவர்களில் ராஜுவும் ஒருவர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜுவின் வீட்டுக்குச் சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
எஸ்.பி.பாலா உடல்நிலை சீராக உள்ளது
சென்னை: பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 16 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்.பி. பாலா. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. மேலும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
களைகட்டாத பிள்ளையார் சதுர்த்தி
மும்பை: மகாராஷ்டிராவில் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாள் கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. கொரோனா கிருமி விவகாரம் காரணமாக அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் வழக்கமான கொண்டாட்டமும் உற்சாகமும் காணப்படவில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிள்ளையார் சிலைகள் அதிகபட்சம் நான்கு அடி உயரம் மட்டுமே இருக்கவேண்டும், சிலை கரைக்கும் நிகழ்வுக்கான ஊர்வலத்துக்கு அனுமதியில்லை என்பன போன்ற விதிமுறைகளை அம்மாநில அரசு வகுத்துள்ளது. மேலும் பொது இடங்களுக்குச் செல்ல மக்கள் அஞ்சுவதால் மும்பை உட்பட பெரும்பாலான பகுதிகளில் பிள்ளையார் சதுர்த்தி களை கட்டவில்லை என கூறப்படுகிறது.
புதிய தேர்தல் ஆணையர் நியமனம்
புதுடெல்லி: மத்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் மத்திய நிதித்துறை செயலராக பொறுப்பு வகித்தார். மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஆணையர் அசோக் லவாசா அண்மையில் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்வானார். எனவே அவர் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து ராஜீவ் குமார் புது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் தமிழிசை கருத்து: ஆளும் தரப்புக்கு அதிருப்தி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கொரோனா பரிசோதனைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் ஆளும் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்எல்ஏ சைதி ரெட்டி ஆளுநர் தமிழிசையின் கருத்தைப் பார்க்கும்போது அவர் மாநில ஆளுநரா அல்லது பாஜக தலைவரா எனும் சந்தேகம் எழுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எனினும் கட்சித் தலைமையின் உத்தரவை அடுத்து அவர் அந்தப் பதிவைப் பின்னர் நீக்கி உள்ளார்.
சீன நிறுவனம் பங்கேற்பு: ஒப்பந்தப் புள்ளியை நிறுத்திய இந்திய ரயில்வே
புதுடெல்லி: ெரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான ஒப்பந்தப்புள்ளியைக் கைப்பற்ற சீன நிறுவனம் ஒன்று முயற்சி செய்ததை அடுத்து அந்த ஒப்பந்தப்புள்ளியை இந்திய ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான 44 ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கு உலக அளவில் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியிருந்தது இந்திய ரயில்வே. இதில் உலகளவில் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதில் அந்நிறுவனம் தீவிரம் காட்டிய நிலையில் திடீரென ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பை இந்திய ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைலாசா: நாணயங்கள் அறிமுகம்
புதுடெல்லி: கைலாச நாட்டுக்கான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் நித்தியானந்தா. மொத்தம் ஐந்து வகையான நாணயங்களை வெளியிட்டுள்ள அவர் இவற்றைக் கொண்டு உலகில் உள்ள 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.

