வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல தூதரகப் பதிவு தேவையில்லை; ஆனால்...

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல தூதரகப் பதிவு தேவையில்லை; ஆனால்...

2 mins read
bfcd2772-ed71-47b5-b899-c942e7602450
எனினும் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தாங்கள் தற்போதுள்ள நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்களில் தங்கள் பெயர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயமாக உள்ளது. படம்: ஏஎஃப்பி -

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் 'ஏர் பப்பல்ஸ்' ஏற்பாட்டின் மூலம் தாயகம் திரும்ப இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் அனைத்துலக அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர 'வந்தே பாரத்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் இந்தியா திரும்பி உள்ளனர்.

எனினும் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தாங்கள் தற்போதுள்ள நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்களில் தங்கள் பெயர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயமாக உள்ளது.

இந்நிலையில் 'ஏர் பப்பல்ஸ்' ஏற்பாட்டின் கீழ் தாயகம் திரும்பும் இந்தியர்கள், தூதரகங்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில கட்டுப்பாடுகளுடன் விமானப் பயணத்தைத் தொடங்குவதற்கான இருதரப்பு ஒப்பந்தமே 'ஏர் பப்பல்ஸ்' என குறிப்பிடப்படுகிறது.

'ஏர் பப்பல்ஸ்' ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளுடன் விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது இந்தியா. ஏற்கெனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

இந்நிலையில் 'ஏர் பப்பல்ஸ்' ஏற்பாட்டில் நாடு திரும்பும் இந்தியர்கள் தூதரகங்களை அணுக வேண்டியதில்லை எனும் அறிவிப்பு தங்களது சிரமங்களைக் குறைக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு தங்களுக்கும் நிம்மதியளித்திருப்பதாக வெளிநாட்டு விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

"விமானப் பயணிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துள்ளனரா என்பதை நாங்கள் உறுதி செய்யவேண்டி இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லை," என்று அந்த அதிகாரி கூறியதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் நாடு திரும்புபவர்கள் இந்தியத் தூதரகங்களில் பெயரைப் பதிவு செய்வது அவசியம் என்றும் அதில் மாற்றமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்