புதுடெல்லி: வடமாநிலங்களில் அண்மைய சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்நிலையில் குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநிலங்களில் கடும் மழைப்பொழிவு காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை தொடங்கி கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. எனினும் இது தீவிர தாழ்வுநிலையாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலை கனமழை புரட்டிப் போட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
படம்: இபிஏ

