புதுடெல்லி: எல்லையில் நிகழும் அத்துமீறல்கள் ஊடுருவல்களாக மாறுவதைத் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லைப் பிரச்சினை குறித்து சீனாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
சனிக்கிழமையன்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் முப்படைத் தளபதிகளும் பங்கேற்றனர்.
இதையடுத்து லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களைக் கையாள்வதற்கான ராணுவத் திட்டம் ஒன்று இந்திய ராணுவத்தின் பரிசீலனையில் இருப்பதாக பாதுகாப்புப் படை தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.
"எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிகழும் வரம்பு மீறல்கள், அதன் சீரமைப்பு தொடர்பான மாறுபட்ட கருத்துகளால் ஏற்படுகின்றன. எனவே, எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் சில அணுகுமுறைகளைப் பின்பற்றும். எல்லையில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றார் ஜெனரல் பிபின் ராவத்.
ராணுவ நடவடிக்கைக்குப் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதுமே தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே திடீர் மோதல் வெடித்தது. இதில், இந்தியத் தரப்பில் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத்தரப்பில் உயிரிழப்பு இரட்டிப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் எல்லையிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எனினும் பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் எல்லையில் சீனா பல்வேறு கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியத் தரப்பு அதிருப்தி அடைந்திருக்கிறது.

