புதுடெல்லி: இணையம் வழி நடைபெற்ற கூட்டத்தின்போது இந்தி தெரியாத தமிழகத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் வெளியேறலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சின் செயலர் வைத்ய ராஜேஷ் மிரட்டல் தொனியில் கூறியது மொழி அரசியலாக உருவெடுத்துள்ளது.
வைத்ய ராஜேஷின் செயல்பாட்டுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆயுஷ் அமைச்சின் செயலர் பதவியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி அகற்றப்பட்டு வெறும் ஆயுர்வேத மருத்துவரான வைத்ய ராஜேஷை நியமித்ததுதான் தற்போது உருவான பிரச்சினைக்கு காரணம் என இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் செளந்தர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதனால் வைத்யா ராஜேஷ் ஆயுர்வேதத்தை அதிகம் ஊக்குவித்து மற்ற மருத்துவமுறைகளைப் புறக்கணிப்பதாக அவர் சாடியுள்ளார்.
"யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் தமிழர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் யோகாவை மட்டும் பிரிக்க முற்படுகிறார் வைத்ய ராஜேஷ். கொரோனா விவகாரத்தில் எங்கள் பணியை அவர் துளியும் அங்கீகரிக்கவில்லை," என்று சவுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
வைத்ய ராஜேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் இணையம் வழி நடந்த கூட்டத்தில் தாம் இந்தியில் ஆற்றிய உரை ஆங்கிலத்திலும் முழுமையாக விளக்கிக் கூறப்பட்டதாக வைத்ய ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமது பேச்சு கணினி மூலம் மாற்றப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது என்றும் இதன்மூலம் மொழிப் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"

