இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி கடந்த 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்குச் சென்றார். 84 வயதான அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தாலும், திரு முகர்ஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.
கொரோனா கிருமித்தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டது; அவருக்கு சுவாசத் தொற்றும் தீவிரமடைந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை வழங்கப்படுகிறது" என நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் 13வது அதிபராக 2012 முதல் 2017வரை திரு முகர்ஜி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


