நொய்டா: தொழிற்சாலைகள் நிறைந்த நொய்டா நகரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 20,000 பேருக்குத் தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார் நடிகர் சோனு சூட் (படம்).
கொவிட்-19 நெருக்கடியின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப உதவியதன் மூலம் தேசிய அளவில் நடிகர் சோனு சூட் மீது புகழ் வெளிச்சம் விழத் தொடங்கியது.
இந்நிலையில், நொய்டாவில் 20,000 பேருக்குத் தங்குமிட வசதியுடன் 'புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு' என்ற தங்களது திட்டத்தின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் அவர்களுக்கு வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் திரு சோனு சூட் தமது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாகத் தெரிவித்து இருக்கிறார்.
"தேசிய ஆடைகள் ஏற்றுமதி நிலையத்தின் தலைவர் திரு லலித் துக்ராலின் ஆதரவுடன், புலம்பெயர்ந்தோருக்கு வேலை வாங்கித் தரும் உன்னதமான பணியில் இரவுபகலாக ஈடுபட்டு வருகிறோம்," என்று திரு சோனு சூட் பதிவிட்டுள்ளார்.
அந்த 20,000 பேருக்கான தங்குமிடங்கள் சுகாதாரமாக இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் இவர் அளித்துள்ளார்.
பொது முடக்கத்தின்போது சொந்த ஊர் திரும்ப வழியின்றித் தவித்த ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரும் பொருட்டு நேரடி அழைப்பு எண்ணையும் வாட்ஸ்அப் எண்ணையும் திரு சோனு சூடும் அவரின் குழுவினரும் அறிவித்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தர உதவும் நோக்கில் அண்மையில் ஒரு திறன்பேசி செயலியையும் இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.