புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்றும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்டதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, அக்கட்சியின் இடைக்காலத் தலைவராகத் சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே, கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று காங்கிரசின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் எழுச்சி பெற்று வருவதாகவும் காங்கிரஸ் மீது இளையர்களிடத்தில் நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தது கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் செயற்குழு கூடியது. அப்போது, தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா விருப்பம் தெரிவித்தார். இதனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ராகுல் காந்தி தலைவராகப் பதவி ஏற்க வேண்டும் எனப் பலர் வலியுறுத்தியபோதும் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை.

