மும்பை கட்டட விபத்தில் 13 பேர் பலி: சிறுவன் உயிரோடு மீட்பு

2 mins read
7cadc49f-fcd5-4de9-b09b-4b681d084263
-

மகாராஷ்டிராவில் ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு வயது சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான்.

சுமார் அறுபது பேர் வரை புதைந்திருக்கலாம் என அஞ்சப்படும் இந்தக் கட்டட விபத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்தகைத் தட்டலுடன் சிறுவன் வெற்றிகரமாக மேலே கொண்டு வரப்பட்டான்.

மும்பைக்குத் தெற்கே ராய்காட் மாவட்ட மகாட்டில் உள்ள காஜல்புரா பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடம் உள்ளூர் நேரப்படி திங்கள் மாலை ஏழு மணி அளவில் இடிந்து தரை மட்டமானது.

நாற்பது வீடுகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் சமார் 200 பேர் வசித்து வந்ததால் பலர் உயிரோடு புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆரம்பத்தில் கட்டட இடிபாடுகளில் 59 பேர் சிக்கியதாக மாநில அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சுமார் 20 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து உள்ளூர் போலிசார், தீயணைப்பு வீரர்கள் மும்பை, புனேயில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மோப்ப நாய்களைக் கொண்டும் உயிரோடு இருப்பவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 13 பேர் பிணமாக மீட்கப்பட்டனர் என்று பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். இவரையும் சேர்த்து பலி எண்ணிக்கை நேற்று வரை 16ஆக அதிகரித்தது. எட்டுப் பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது பலர் கடைகளுக்குச் சென்றிருந்தனர். மேலும் சிலர் கிருமிப்பரவல் அச்சம் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். இதனால் உயிர்ச் சேதம் குறைந்தது.

கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டு வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட முஸ்தபா சாஃபேகர், நிலநடுக்கம் போல இருந்தது என்றார்.

"உடனே நானும் எனது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். அடுத்த சில நிமிடங்களில் எங்கள் கண் முன்னாடியே கட்டடம் இடிந்து விழுந்தது," என்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 39 வயது முஸ்தபா சொன்னார்.