தாய்க்குரங்கு அருகில் இல்லாத வேளையில், மரக்கட்டை ஒன்றில் இருந்த துளைக்குள் விழுந்து, வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது குட்டிக் குரங்கு.
அருகில் உள்ள செடிகளைப் பிடித்துக்கொண்டு வெளியே வர அந்த குரங்குக்குட்டி பலவாறு முயற்சி செய்கிறது; ஆனால், இறுதியில் சோர்வடைந்து, செய்வதறியாமல் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில்...
அங்கு வந்த ஒரு நாய், குரங்குக்குட்டியின் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, தன் வாயால், குரங்குக்குட்டியின் கழுத்தைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்கிறது.
அந்த வேலை ஒன்றும் அவ்வளவு எளிதில் முடிந்துவிடவில்லை; வெவ்வேறு இடங்களில் மாறி நின்று குரங்குக்குட்டியை இழுத்து தனது காரியத்திலேயே கண்ணாக இருந்த நாய், இறுதியில் குரங்குக் குட்டியை வெளியில் இழுத்து, தனது முயற்சியில் வெற்றி கொள்கிறது.
குரங்குக் குட்டியைக் காப்பாற்றிய திருப்தியில் நாய் நிற்க, வழக்கம்போல் விளையாடப் போய்விடுகிறது குரங்குக்குட்டி.
இது கதை இல்லை. சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளி ஒன்றில் காணப்படும் உண்மைச் சம்பவம். இது வட இந்தியாவின் ஒரு பகுதியில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
பலராலும் பகிரப்படும் இந்தக் காணொளியை இணையவாசிகள் ரசித்தாலும் காணொளி எடுத்தவரை பலர் திட்டவும் செய்கின்றனர்.
தவிக்கின்ற குரங்கை அவர் காப்பாற்றவில்லை என்பதே அதற்குக் காரணம்; ஆனால், நாயின் புரிந்துணர்வையும் விடா முயற்சியையும் எடுத்துக்காட்ட அவர் வாய்ப்பளித்ததாக சிலர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

