புதுடெல்லி: இந்தியா சீனா இடையேயான உறவு கடந்த 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசடைந்து இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இருதரப்பும் எல்லையில் படைகளைக் குவித்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்யத்தான் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவுவது இருதரப்பு உறவுகளைப் பொறுத்தே அமையும். இதை சீனாவிடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
"கடந்த காலங்களில் இருதரப்பு ராணுவங்கள் தொடர்பான விவகாரங்களுக்கு ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணப்பட்டது. எல்லையில் தற்போது உள்ள நிலைமை மிகவும் தீவிரமான ஒன்று. கடந்த 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு இருதரப்பு உறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது," என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருதரப்பும் இந்தளவு ராணுவத்தைக் குவித்திருப்பதும் முன்பில்லாத வகையில் எதிர்பாராத ஒன்று என்று குறிப்பிட்டுள்ள அவர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா- இந்தியா எல்லையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால் இருதரப்புக்கு இடையேயான அனைத்து ஒப்பந்தங்களுக்கும் புரிதல்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
சீனா, இந்தியா இடையேயான எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.

