சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கடப்பாட்டை இரு நாடுகளையும் சேர்ந்த தற்காப்பு அதிகாரிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படைக்கும் இந்திய ஆயுதப் படைக்கும் இடையிலான செயலாக்க ஒத்துழைப்பின் அடிப்படையில் இது சாத்தியமாகும் என்றனர் அவர்கள்.
சிங்கப்பூர் நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு) சான் ஹெங் கீயும் இந்தியாவின் தற்காப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமாரும் நேற்று பிற்பகலில் காணொளி வழியாகக் கலந்துரையாடல் நடத்தியபோது இந்தத் தகவல்கள் வெளிப்பட்டன.
'ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் நிலை கூட்டம்-பிளஸ்' கட்டமைப்பின்கீழ் வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கருத்துகளையும் இருதரப்பு அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர்.
2015ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு கையெழுத்திடப்பட்ட இந்தியா-சிங்கப்பூர் தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இரு நாடுகளும் வலுவான, நீண்டகால தற்காப்பு உறவுகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றன.

