'பாதுகாப்புத்துறை உற்பத்தியில் 74% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி'
புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டு ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டின் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான கருத்தரங்கு காணொளி வசதி மூலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, உலகில் அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.
மத்தியில் பாஜக அரசு அமைந்தபிறகு உள்நாட்டிலேயே ஆயுதங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், 101 வகையான பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்ய அண்மையில் தடை விதிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார்.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 74 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
"ஆயுத உற்பத்தியை அதிகரிக்க, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.
"பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைந்தால் உலகளாவிய அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும்," என்றார் பிரதமர் மோடி.
பாதுகாப்புத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முப்படைகளுக்கு தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் இருபது ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றார்.
"பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டங்களை விரைவுபடுத்த சிவப்பு நாடா முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 108 வகையான பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தியாவும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் என்றும் அப்போது நட்பு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

