புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
தனக்குள்ள பொறுப்பை அந்நாடு தட்டிக் கழிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
"இதன்பிறகும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தாவுத் இப்ராகிம் விஷயத்தில் அந்நாடு மாற்றிப் பேசுகிறது," என்றார் அனுராக் ஸ்ரீவத்சவா.
பயங்கரவாத இயக்கங்கள் மீதோ, தேடப்படும் தனிப்பட்டவர்கள் மீதோ பாகிஸ்தான் நம்பகமான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இனி பாகிஸ்தானால் உலகத்தைத் திசை திருப்ப முடியாது என்றார்.
"புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அதன் தலைவர்கள் பாகிஸ்தானில்தான் உள்ளனர். முதல் குற்றவாளியான மசூத் அசாருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருகிறது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது," என்றார் அனுராக் ஸ்ரீவத்சவா.