எல்லாத் தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்

எல்லாத் தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்

2 mins read
3376dc9e-76dd-4337-9fc2-4c5c34f4a7bf
கோப்புப்படம் -

செலவுகளையும் குழப்பங்களையும் தவிர்க்க மத்திய அரசு தீவிர ஆலோசனை

புது­டெல்லி: மக்­க­ளவை, சட்­ட­சபை, உள்­ளாட்சி உள்­ளிட்ட அனைத்து தேர்­தல்­க­ளுக்­கும் பொது வாக்­கா­ளர் பட்­டி­யலை உரு­வாக்­கு­வது குறித்து மத்­திய அரசு தீவி­ர­மாக ஆலோ­சனை நடத்தி வரு­கிறது.

தற்­போ­துள்ள நிலை­யில் மக்­க­ளவைத் தேர்­தல், சட்­டப்­பே­ரவைத் தேர்­தல் என தனித்­த­னி­யாக தேர்­தல் நேரத்­தில் வாக்­கா­ளர் பட்­டி­யலை தேர்­தல் ஆணை­யம் தயா­ரிக்­கிறது.

அதே­போல உள்­ளாட்சித் தேர்­தல் நேரத்­தில் மாநிலத் தேர்­தல் ஆணை­யம், நக­ராட்­சி­கள், ஊராட்­சி­கள் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து வாக்­கா­ளர் பட்­டி­யலை தயா­ரிக்­கிறது. இப்­படி பல­வி­த­மாக வாக்­கா­ளர் பட்­டி­யல்­கள் தயா­ரிப்­ப­தால் கூடு­தல் செலவு ஏற்­ப­டு­கிறது. அத்­து­டன் ஏதா­வது ஒரு வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பல வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் விடு­பட்­டுப்­போ­கின்­றன. இத­னால் பிரச்­சி­னை­யும் குழப்­ப­மும் ஏற்­ப­டு­கின்­றன.

இந்த நிலை­யைத் தவிர்க்க, எதிர்­கா­லத்­தில் நாடா­ளு­மன்­றம், மாநில சட்­ட­சபை, உள்­ளாட்­சித் தேர்­தல் ஆகிய மூன்­றுக்­கும் ஒரே வாக்­கா­ளர் பட்­டி­யலை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு குறித்து மத்­திய அரசு தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­வ­தாக டெல்­லி­யில் மத்­திய அரசு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது தவிர பல்­வேறு மாநி­லங்­களில் உள்ள தேர்­தல் ஆணை­யங்­கள் வரைவு வாக்­கா­ளர் பட்­டி­ய­லை­யும் வெளி­யிட்டு சொந்­த­மாக வாக்­கா­ளர் பட்­டி­ய­லை­யும் தயா­ரிக்­கின்­றன.

இந்­நி­லை­யில் வாக்­கா­ளர் பட்­டி­யல் தயா­ரிப்­பில் இருக்­கும் முரண்­பா­டு­க­ளை ­க­ளை­யும் விதத்­தில், மக்­க­ளவை, சட்­ட­சபை, உள்­ளாட்சித் தேர்­தல் என அனைத்­துக்­கும் பொது­வான ஒரே வாக்­கா­ளர் பட்­டி­யலை தயா­ரிக்க மத்­திய அரசு திட்­ட­மிட்டு ஆலோ­சித்து வரு­கிறது. மாநி­லங்­கள் சட்­ட­ம்­இயற்றி, சுய­மாக உள்­ளாட்சித் தேர்­தல்­களை நடத்­திக்கொள்ள அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப்­படி அதி­கா­ரம் இருக்­கிறது.

இதன்­படி மாநி­லங்­களே சொந்­த­மாக வாக்­கா­ளர் பட்­டி­ய­லைத் தயா­ரிக்­க­லாம் அல்­லது சட்­டப்­பே­ரவை தேர்­தல் நேரத்­தில் தேர்­தல் ஆணை­யம் தயா­ரித்த வாக்­கா­ளர் பட்­டி­ய­லைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம். தற்­போது மாநி­லங்­களை மத்­திய தேர்­தல் ஆணை­யம் தயா­ரித்த வாக்­கா­ளர் பட்­டி­யலை பயன்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படு கிறது. ஆனால், பொது­வான வாக்­கா­ளர் பட்­டி­யல் முறை வந்­தால் ஒரே பணியை தேர்­தல் நேரத்­தில் திரும்ப செய்­யும் பணி தவிர்க்­கப்­படும். ஒரே பணிக்கு இரு முறை செல­வி­டு­வது தவிர்க்­கப்­படும்.

ஒரே வாக்­கா­ளர் பட்­டி­யல் முறைக்கு ஏற்­கெ­னவே தேர்­தல் ஆணை­யம், சட்ட ஆணை­யம், பணி­யா­ளர் மற்­றும் சட்­டத்­துக்­கான நாடா­ளு­மன்ற நிலைக்­குழு ஆகி­யவை ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.