உட்கட்சி தேர்தல் யோசனை தெரிவித்த குலாம் நபி ஆசாத்துக்கு கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது என்றும் கூறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க குலாம் நபி ஆசாத் (படம்) கட்டாயப்படுத்தியதாகவும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசை அழித்தவர் என்றும் அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்ரி கடுமையாகக் குறைகூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி இருந்தனர்.
"காங்கிரசுக்கு முழுநேர, துடிப்பான தலைமை தேவை. கட்சியின் தலைமையில் இருந்து அடிமட்டம் வரை மாற்றம் தேவை. உட்கட்சி தேர்தல் மூலம் நிரந்தரத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்," என அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் பின்னர் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தலைவர்களின் கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கடிதம் எழுதிய தலைவர்களை ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப் படுகிறது.
காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டதால் கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், "ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தலை நடத்தி காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்போது 51 விழுக்காட்டினராவது உங்கள் பின்னால் இருப்பார்கள்.
"தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுகின்றனர். இது கட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை. உட்கட்சித் தேர்தல் நடத்தினால் மட்டுமே காங்கிரசை வலுப்படுத்த முடியும். இல்லையென்றால் அடுத்த ஐம்பதுஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாது. எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறும்போது, கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் மீது செயற்குழுக் கூட்டத்தில் கூறப்பட்ட விமர்சனங்கள் அநாகரிகமாக உள்ளன என்றார்.

