இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளி ஆந்திரா இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஆந்திராவில் நேற்று புதிதாக 10,603 பேரை கொரோனா தொற்றியது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 424,767ஆக உயர்ந்தது. இதுவரை அங்கு 3,884 பேர் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் அங்கு நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர்
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர். அதிலும் குறிப்பாக, தொடர்ந்து ஐந்து நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு பத்தாயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 422,085 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அம்மாநிலத்தில் மேலும் 6,495 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது. சென்னையில் 18 பேர் உட்பட அங்கு மேலும் 94 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் இதுவரை 7,231 பேரின் உயிரை கொரோனா பறித்துவிட்டது.
இந்திய மாநிலங்களிலேயே ஆந்திராவில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மில்லியன் பேருக்கு 67,478 என்ற விகிதத்தில் அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு மில்லியன் பேருக்குக் கிட்டத்தட்ட 60,000 பரிசோதனைகள் என்ற விகிதத்துடன் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
கிருமி பாதிப்பைப் பொறுத்தமட்டில், மகாராஷ்டிர மாநிலம் 780,689 பேருடன் முதலிடத்தில் நீடிக்கிறது. கர்நாடகாவும் உத்தரப் பிரதேசமும் முறையே நான்காம், ஐந்தாம் இடத்தில் இருக்கின்றன.
இதனிடையே, இந்தியாவில் நேற்று புதிதாக 78,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதை அடுத்து, மொத்த பாதிப்பு 3.6 மில்லியனைத் தாண்டியது. மேலும் 971 பேர் கொரோனாவால் உயிர் இழக்க, பலி எண்ணிக்கை 64,469 ஆக அதிகரித்தது.

