இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணரான பத்மாவதி கொரோனா கிருமித் தொற்றால் காலமானார். அவருக்கு வயது 103.
'இதய சிகிச்சையின் தாய்' என்று அன்போடு குறிப்பிடப்பட்ட அவர், தமது 98ஆவது வயது வரை தேசிய இதய சிகிச்சை மையத்தில் பணியாற்றி வந்தார்.
தள்ளாத வயதிலும் தினமும் 12 மணி நேரம் பணியாற்றி வந்த அவர், கிருமித் தொற்று ஏற்படுவதற்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பத்மாவதியின் மருத்துவ சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை அறிவித்துள்ளது.
கடந்த 1962ஆம் ஆண்டு அனைத்திந்திய இதய சிகிச்சை மையத்தைத் தொடங்கிய பத்மாவதி பின்னர் 1967ஆம் ஆண்டு மவுலானா ஆசாத் பல்கலைக்கழக மருத்துவமனையின் முதன்மை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் தகனச்சாலையில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

