பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிப்பு

பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிப்பு

1 mins read
9df3e079-843c-404d-8ca0-e287226250e2
படம்: ஊடகம் -

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவர் மூன்று மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் அல்லது மூன்றாண்டுகளுக்கு அவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதிக்கப்படும் என்றும் நேற்று வழங்கிய தீர்ப்பில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்து பிரஷாந்த் பூஷண் அண்மையில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று புகார் எழுப்பிய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி என்பவர் பிரஷாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார்.

வழக்கு விசாரணையின்போது தமது கருத்துகளை நியாயப்படுத்திய பிரஷாந்த் பூஷண், அவற்றை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அவரது நடவடிக்கையை குற்றமாகக் கருதிய உச்ச நீதிமன்றம், அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என அறிவுறுத்தியது.

ஆனால், பிரஷாந்த் பூஷண் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய தம்மால் மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்புக் கோர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மிகவும் மரியாதையுடன் தீர்ப்பை மதித்து அபராதத்தை செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்