வறுமை; மருத்துவமனையிடமே குழந்தையை விற்ற பெற்றோர்

வறுமை; மருத்துவமனையிடமே குழந்தையை விற்ற பெற்றோர்

1 mins read
6eebc77f-6124-4edf-b0c6-28377cc20573
குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும் தாங்களும் வேறு வழியின்றி குழந்தையை விற்றுவிட்டதாகவும் ஷிவ் சரண்-பபிதா தம்பதி கூறினர். படம்: இந்திய ஊடகம் -

பிரசவத்திற்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த பணமில்லாததால் பெற்றோரே தங்கள் குழந்தையை அதே மருத்துவமனையிடம் விற்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்துள்ளது.

ரிக்‌ஷா ஓட்டும் ஷிவ் சரண், 45, தன் மனைவி பபிதா, 36, ஐந்து பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன் பபிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000, மருந்துகளுக்கு ரூ.5,000 என மொத்தம் 35,000 ரூபாய் கட்ட வேண்டும் என மருத்துவமனை அறிவுறுத்தியது.

ஆனால், ஷிவ் சரண்-பபிதா தம்பதியிடம் போதிய பணமில்லை.

இதையடுத்து, குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும் தாங்களும் வேறு வழியின்றி குழந்தையை விற்றுவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இது மிக மோசமான செயல் எனக் குறிப்பிட்ட மாவட்ட நீதிபதி பிரபு சிங், சம்பவம் குறித்து விசாரித்து, தவறிழைத்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜேபி மருத்துவமனையின் மேலாளர் சீமா குப்தா நிர்வாகம், ஷிவ் சரண்-பபிதா தம்பதி விரும்பியே குழந்தையைத் தத்துக் கொடுத்ததாகவும் அவர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதம் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்