மறைந்த முன்னாள் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியின் நல்லுடல் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, அதிபர் ராம்நாத் கோவிந்த், துணை அதிபர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேற்றுக் காலையில் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள திரு பிரணாப்பின் வீட்டிற்குச் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி எம்.பி. உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் திரு பிரணாப்புக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
சிங்கப்பூர் தலைவர்களும் திரு பிரணாப்பின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப், இந்திய அதிபர் ராம் நாத் கோவிந்துக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், "இந்தியா அதன் அருமையான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது," என்று குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்த திரு பிரணாப் முகர்ஜி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிகப் பரிச்சயமானவர் என்று குறிப்பிட்டதுடன், ஆசியானுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது என்றார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்திய அதிபராக இருந்த திரு பிரணாப், நேற்று தமது 84வது வயதில் காலமானார்.
தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. வீட்டில் தவறி கீழே விழுந்ததை அடுத்து, கடந்த மாதம் 10ஆம் தேதி அவர் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அறுவை சிகிச்சைக்குப் பின் சுயநினைவற்ற நிலையிலே இருந்த அவருக்குத் தொடர்ந்து செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. திரு பிரணாப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி நேற்று முன்தினம் மாலையில் தம் தந்தையின் மறைவு குறித்து தமது டுவிட்டர் பக்கம் வழியாக அறிவித்தார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக பீரங்கி வாகனத்திற்குப் பதிலாக அவசர மருத்துவ வாகனத்தில் திரு பிரணாப்பின் நல்லுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
நாட்டின் உயரிய பாரத் ரத்னா விருது பெற்றவரான திரு பிரணாப்பின் மறைவுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசும் தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் அறிவித்து உள்ளன. இந்த ஒரு வார காலத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

