புதுடெல்லி: அண்மையில் 'டிக்டாக்' உட்பட சீன நிறுவனங்களின் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது 'பப்ஜி' உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் இவ்வேளையில், இந்தியாவில் மிகப் பிரபலமான, 'பப்ஜி' உள்ளிட்ட 118 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
உலக அளவில் பலராலும் விளையாடப்படும் 'பப்ஜி' செயலியைப் பதிவிறக்கியவர்களுள் 25 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயனாளர்களின் தகவல்களைக் களவாடி அவற்றை தவறாகப் பயன்படுத்துவதாக பல தரப்புகளிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் இவ்வாறு தகவல்களைச் சேகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இந்த அறிவிப்புகளால் சீனாவின் டென்சென்ட் ஹோக்டிங்ஸ் நிறுவனம் பெரிதளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் ஏற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் சீன நிறுவனங்களின் 'டிக்டாக்' உள்ளிட்ட பல செயலிகளைப் பயன்படுத்த தடைவிதித்திருந்தது இந்திய அரசு.