புதுடெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்ட தெலுங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்டதுடன் அவரை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திரு ராஜா சிங்கை பிரதிநிதிக்கும் கணக்குகளும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் சமய விரோதத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளர்கள் ஆளும் பாஜக அரசுக்கு சார்பாக நடந்துகொள்வதாக அமெரிக்காவின் வால் ஸ்திரீட் ஜர்னல் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இதனைக் குறிப்பிட்டு, இந்தியாவின் ஃபேஸ்புக் நிறுவன பொறுப்பாளர்களை மாற்ற வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விசாரணை கோரின.
அதனையடுத்து, நேற்று முன்தினம், ஃபேஸ்புக் இந்தியாவின் அதிகாரி அஜித் மோகன், தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் தமது ஃபேஸ்புக் கணக்கை யாரோ ஊடுருவிவிட்டதாகவும் அதனையடுத்து தனக்கு ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லை எனவும் தம் பெயரில் பல கணக்குகளை வேறு யாரோ வைத்திருப்பதாகவும் டுவிட்டரில் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ராஜா.

