இந்தியாவில் மாரடைப்பு மூலம் ஏற்படும் மரணங்கள் ஐந்து ஆண்டுகளில் 53% அதிகரிப்பு

இந்தியாவில் மாரடைப்பு மூலம் ஏற்படும் மரணங்கள் ஐந்து ஆண்டுகளில் 53% அதிகரிப்பு

2 mins read
fa36260d-f8e2-4780-ba27-ddeeb8af3bd6
-

புதுடெல்லி: இந்தியாவில் 2014ஆம் ஆண்டி லிருந்து மாரடைப்பு மூலம் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதை தேசிய குற்றப் பதிவு துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 2014ல் மொத்தம் 18,309 பேர் மாரடைப்பால் இறந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2019ல் 28,005 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இது, ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 53 விழுக்காடு என்று இலாகா கூறியது.

மாரடைப்பு பலதரப்பட்ட வயதினரைப் பாதித்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களையும் 14 முதல் 18 வயது வரையிலானவர்களையும் தவிர்த்து மற்ற வயதினரிடையே மாரடைப்பு அதிகரித்து வந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களில் 1,940 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே பிரிவைச் சேர்ந்தவர்கள் 2,381 பேர் மாரடைப்புக்கு பலியாகினர். முப்பதுக்கும் 45 வயதுக்கும் இடையே உள்ள பிரிவுகளிலும் இதே போக்கு நிலவுகிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 2016ல் மொத்தம் 6,646 பேர் இறந்துவிட்டனர். இந்த எண்ணிக்கை 2019ல் 7,752ஐத் தொட்டுள்ளது.

45-60 வயதினரிடையே 2016ல் 8,862ஆக இருந்த மாரடைப்பு மரணங்கள் கடந்த ஆண்டு 11,042க்கு அதிகரித்தது. அறுபதுக்கு மேற்பட்ட வயதினரிடையே கடந்த ஆண்டு 6,612 பேர் இறந்துவிட்டனர். இது, 2016ல் 4,275ஆக இருந்தது.

ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இதயநல நிலையத்தின் தலைவரான டாக்டர் அஷோக் சேத், புள்ளி விவரங்கள் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளதால் மாரடைப்பு மரணங்கள் பற்றிய உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேக்ஸ் மருத்துவமனையின் இதய அறிவியல் பிரிவின் முதன்மை இயக்குரான டாக்டர் விவேகா குமார், சுகாதாரமற்ற வாழ்க்கைபாணி, புகைபிடித்தல், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று தெரிவித்தார்.