'அமைதி, பாதுகாப்புக்கு நம்பிக்கைதான் முக்கியம்'

'அமைதி, பாதுகாப்புக்கு நம்பிக்கைதான் முக்கியம்'

2 mins read
5b692077-3c7d-4653-a495-4f8c71ca6a5d
படம்: ஊடகம் -

மாஸ்கோ: உலக மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் வசிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ நம்பிக்கை தேவை என அந்தக் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்திள்ளார்.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் ஆறு பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர் களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்து, பின்னர் தணிந்தது.

அண்மையில் லடாக் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியவில்லை என்றால் ராணுவ ரீதியாக தீர்வு காணப்படும் என்று தலைமை தளபதி பிபின் ராவத் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு மாஸ்கோவில் நடைபெறுகிறது. அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வீ பங்கே உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் அமைதி, பாதுகாப்பைப் பேணுவதற்கும் அனைத்துலக விதிகளுக்கு உட்பட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்தியாவும் சீனாவும் 'எஸ்சிஓ' உறுப்பினர்களாக உள்ளன. இது எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்ட வட்டார அமைப்பாகும். இது முக்கியமாக பாதுகாப்புப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "உலக மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் வசிக்கும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் அமைதி நிலவவும் பாதுகாப்பு ஏற்படவும் நம்பிக்கை தேவை," என்று கூறினார்.

சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வீ பங்கே முன்னிலையில் ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்தார்.