புதுடெல்லி: இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்குவதற்கும் அவற்றை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்தது.
தெலுங்கானா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் மற்றொரு தென்மாநிலமான தமிழகம் 14ஆம் இடத்தில் உள்ளது.
மாநிலத் தொழில் சீர்திருத்தச் செயல் திட்டம் 2019 அடிப்படையில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி என பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டிலும் ஆந்திராதான் முதல் இடம் பிடித்தது.
இரண்டாவது இடம், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் தெலுங்கானா உள்ளது.
மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2018இல் 15ஆவது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது 14ஆம் இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆத்மநிர்பர் பாரத்தின் (தற்சார்பு இந்தியா) இலக்கை அடைய மாநிலங்கள் முன்னோக்கி நடைபோடுவதாக தெரிவித்தார்.

