நிலவுக்குச் செல்ல முனையும் சந்திரயான்-3, 2021ன் முற்பகுதியில் துவங்கப்படக்கூடும் என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங் தெரிவித்திருக்கிறார். ஆயினும், சந்திரான்-2 ஐப் போல அல்லாமல் நிலவைச் சுற்றும் கலனை அது கொண்டிருக்காது. இருந்தபோதும் நிலவில் தரையிறங்குவதற்கும் ஊர்ந்து செல்வதற்குமான கருவிகளை இந்த விண்கலம் நிலவுக்கு எடுத்துச் செல்லும் என கூறப்படுகிறது.
சந்திரயான்-3ஐ இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற இஸ்ரோ விண்வெளி அமைப்பு தொடக்கத்தில் திட்டமிட்டபோதும் தற்போதைய கொவிட்-19 கிருமிப்பரவலால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை எட்ட முனைந்த சந்திரயான்-2, கடந்தாண்டு ஜூலை 22 ஆம் தேதி பூமியைவிட்டுப் புறப்பட்டது. ஆனால் நிலவை செப்டம்பர் 7ஆம் தேதி அடைந்த அந்தக் கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கவில்லை.
இந்நிலையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கங்காயான் திட்டமும் கொவிட்-19 பரவலால் தாமதமடைந்துள்ளது.

