பெங்களூரு: கொவிட்-19 நோய்க்கு சிகிச்சையளிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும்படி உயரதிகாரிகள் தொல்லை அளித்ததால் அரசுப் பணியை உதறியுள்ளார் ஒரு மருத்துவர்.
இதையடுத்து அவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவதாக கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், பல்லாரி பிம்ஸ் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்ததை அடுத்து அதற்காக சிகிச்சை அளிக்கப்படும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
எனினும் தினமும் தம்மால் அப்பிரிவில் பணியாற்ற இயலாது என ரவீந்திரநாத் வாக்குவாதம் செய்ததை அடுத்து அதிகாரிகள் அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாளே அவருக்கு மீண்டும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் அரசு மருத்துவர் பணியில் இருந்து ராஜினாமா செய்தார். தமது இந்த முடிவுக்கு சுகாதாரத் துறையைச் சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் காரணம் என அவர் சாடியுள்ளார்.
பின்னர் தனது சொந்த கிராமத்துக்குக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், அங்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக சுகாதார அமைச்சருக்குத் தகவல் தெரிய வந்ததை அடுத்து ரவீந்திரநாத்தை மீண்டும் பணிக்குத் திரும்பும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ரவீந்திரநாத் புகார் அளிக்கலாம் என்றும் அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தமது ஆட்டோவின் முகப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளால் தாம் பாதிக்கப்பட்டதாக விவரிக்கும் வார்த்தைகளை 'ஸ்டிக்கர்' வடிவில் ஒட்டியுள்ளார் ரவீந்திரநாத்.

