பயன்படுத்தத் தெரியவில்லை; திருடிய கைபேசி அதன் உரிமையாளரிடமே ஒப்படைப்பு

1 mins read
fce6888c-659c-497e-9fe8-ce2490b36c01
திருட்டு குறித்து வருத்தம் தெரிவித்த இளையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கைபேசியின் உரிமையாளர் போலிசிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. படம்: தமிழ் முரசு -

இனிப்புப் பண்டங்கள் விற்கும் கடை ஒன்றில் இம்மாதம் 4ஆம் தேதி தன்னுடைய $45,000 மதிப்பிலான விவேக கைபேசியைத் தொலைத்துவிட்டார் ஆடவர் ஒருவர்.

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு புர்துவான் மாவட்டத்தில் உள்ள ஜமல்பூரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலிசில் புகார் அளித்தார் அந்த ஆடவர்.

ஆனால், கைபேசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலிசாரும் கைவிரித்துவிட்டனர்.

சோகத்தில் இருந்த அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார் கைபேசியைத் திருடிச் சென்ற 22 வயது இளையர்.

கைபேசியைத் திருட்டுக் கொடுத்த நபர், தன்னுடைய கைபேசிக்கு அழைப்பு செய்தபோது, அந்தக் கைபேசியைத் தமக்குப் பயன்படுத்தத் தெரியாததால் அதனைத் திருப்பித் தந்துவிட விரும்புவதாகக் கூறி, கைபேசியையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஆம். போலிசாரின் உதவியுடன், திருடிச் சென்றவரின் வீட்டுக்கே சென்று தன்னுடைய கைபேசியைப் பெற்றுக்கொண்டார், அதன் உரிமையாளர்.

திருட்டு குறித்து வருத்தம் தெரிவித்த இளையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கைபேசியின் உரிமையாளர் போலிசிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்