மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் எல்லைப் பதற்றத்தைத் தணிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாஸ்கோ சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் அங்கு வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேசினர்.
அப்போது எல்லையில் அமைதியையும் சமாதானத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலையை மாற்ற இந்தியப் படைகள் ஒரு போதும் முயற்சி செய்ததில்லை என்றும் திரு ஜெய்சங்கர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனத் துருப்புகள் ஆயுதங்களுடன் கூடியது குறித்து இந்தியா தமது வலுவான கருத்தையும் பதிவு செய்தது.
இரு தரப்பிலும் நடைபெற்ற வெளிப்படையான, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் பதற்றத்தைத் தணிக்க ஐந்து அம்சத் திட்டத்துக்கு இரு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்தனர்.
இது தொடர்பாக இந்திய-சீன தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
எல்லையில் தற்போதுள்ள சூழ்நிலை இரு தரப்புக்கும் உகந்ததாக இல்லையென்பதால் இரு தரப்பு எல்லைப் படைகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
விரைவில் படைகளை மீட்டுக் கொண்டு, இருதரப்பினரும் முறையான இடைவெளி கடைப்பிடித்து பதற்றத்தைத் தணிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி எல்லைப் பிரச்சினையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய - சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
வேறுபாடுகள் தகராறுகளாக மாறாமல் தடுக்க வேண்டும்.
எல்லையில் பதற்றத்தை அதி கரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியா-சீனா படைகளிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இரு தரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

